சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அரசு உதவி எண்கள், செயலிகளை அறிவித்துள்ளது. குழந்தை உதவி எண் 1098, மகளிர் உதவி எண் 181, முதியோர் உதவி எண் 14567, இணையதள குற்றத்தடுப்பு உதவி எண் 1930 போன்ற இலவச உதவி எண்கள், காவலன் மற்றும் காவல் உதவி போன்ற கைபேசி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில், "2021-22 ஆம் ஆண்டில் 267 குழந்தைகள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டு தத்தெடுப்பில் ஆண் குழந்தை -109, பெண் குழந்தை -139.
வெளிநாட்டு தத்தெடுப்பில் ஆண் குழந்தை -9, பெண் குழந்தை -10. மாநில மூத்த குடிமக்களுக்கான வரைவு கொள்கை 2022 விரைவில் வெளியிடப்படும். முதியோர் பராமரிப்பு பல்வேறு துறைகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை, நீதித் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய் துறை போன்ற துறைகளில் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
200 பள்ளி சத்துணவு மையங்களில் சமூக தணிக்கை பணிகளை, 2022-23 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையங்கள் செங்கல்பட்டு, மதுரை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. 2021-22 ஆம் ஆண்டில் 87 குழந்தைகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகளுக்கான பிரத்யேக போதை தடுப்பு மையங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Track Alagar செயலி:'ஒரு லட்சம் பேர் டவுன்லோடு செய்து சாதனை' - மதுரை எஸ்.பி. தகவல்