சுந்தரவள்ளி, செங்கொடி மற்றும் பெண் சிவனடியார் கலையரசி நடராசன் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 13) புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், ”பொது வாழ்க்கையில் உள்ள பெண்கள் சமூக பிரச்னைகள் குறித்து தங்களின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும்போது, தனிப்பட்ட தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக சில இந்து அமைப்பினர், பாஜக ஆதரவாளர்களான கிஷோர் கே சாமி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் சில யூடியூப் சேனல்கள் தொடர்ந்து எங்கள் மீது அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.
பெண்களை இழிவுபடுத்தி பேசிய..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெண் சிவனடியார் கலையரசி நடராசன், "சாமியார் பெயரில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த நபரான சிவசங்கர் பாபா குறித்து கருத்து வெளியிட்டதற்கு இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்" என்றார்.
தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலர் சுந்தரவள்ளி, "பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஆபாச பேச்சுகளை கேட்டு வருகிறேன். எதற்கும் ஒரு எல்லை உண்டு. எந்த காலகட்டத்திலும் நாங்கள் இழிவாகவோ, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ பேசியது இல்லை. எதிரணியில் உள்ள நபர்களின் அரசியல் சித்தாந்த கருத்துக்களை மட்டுமே எதிர்த்து பேசிவருகிறோம்.
நாம் தமிழர் கட்சியினர் பலர் தன்னை மது அருந்துவதாகவும், விலைமாதர் என்றும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரிவித்தபோது, எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அரைவேக்காட்டு ஆசாமிகள்
மேலும் பெண்களுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வந்தபோது, அது தொடர்பாக புகார் அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை ஒரு நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்லை. குறிப்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் சைபராகவே உள்ளனர்.
தற்போது தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்களில் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டு, தற்போது மீண்டும் இந்த புகாரை அளிக்க வந்துள்ளோம். தொடர்ந்து சில அரைவேக்காட்டு ஆசாமிகள் பெண்கள் மீது வசவுகளை பேசி வருகின்றனர். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை 60 % ஆக உயர்வு'