தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பில் ட்விட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், “பெண் பத்திரிகையாளரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்ட கிஷோர் கே சுவாமி விவகாரத்தில் எங்களுடைய அதிருப்தியை காவல் ஆணையரிடம் நேரடியாக முறையிட்டு பதிவு செய்துள்ளோம்.
இந்த வழக்கை தனி வழக்காகக் கருதாமல் இதற்கு முன்பும் இவர் இதே போன்ற வழக்கில் கைதாகி பிணை பெற்றவர் என்பதையும், இதேபோன்று பல பத்திரிகையாளர்கள் 10க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர்மீது அளித்துள்ளதையும் கவனத்தில் கொண்டு இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
பல ஆண்டுகளாகப் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பரப்பிவரும் கிஷோர் மீது தகுந்த நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறை எடுக்கும் என்று காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.
ஆனால் இன்றைய தேவை, செயல் ஒன்றே சிறந்த சொல். சட்டத்தின் முன்னால் குற்றவாளியை நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் காவல் துறை. கிஷோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை எங்களுடைய சட்டப்போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.