சென்னை: அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பாரதி நகரில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. ஒடிசாவைச் சேர்ந்த இவர், தனது மனைவி குமாரி கஞ்சக்கா (23) என்பவருடன் தங்கி கட்டட வேலை செய்து வருகிறார். குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒடிசாவிலுள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக தகவல் வந்தது.
இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா, குமாரி கஞ்சக்கா தம்பதி ஒடிசா சென்றனர். அங்கு இறுதி சடங்கில் பங்கேற்ற குமாரியிடம் உறவினர்கள் கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.
இதனைக் கேட்ட குமாரி, இதுபோல தானும் குழந்தை பிறக்கும்போது இறந்து விடுவோமோ என்று அச்சத்தில் தனது வயிற்றில் வளர்ந்து வரும் 4 மாத சிசுவை கலைக்க முடிவு செய்துள்ளார். அதை தனது கணவருக்குத் தெரிவிக்காமல் தனது தோழியிடம் உதவி கேட்டுள்ளார்.
கருக்லைப்பு மருந்தால் வந்த வினை
தோழியின் அறிவுரைப்படி அவருடைய சொந்த ஊரிலுள்ள ஒரு நபரிடம் சென்று கருக்கலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். இது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளார். மருந்து சாப்பிட்டது முதல் குமாரி அவ்வப்போது பலவீனமாக இருந்துள்ளார்.
ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் குமாரியின் உடல் நிலை கடந்த சில நாள்களாக மிகவும் மோசமடைந்துள்ளது. திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி, சிறுநீர் வெளியேறாத பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே தான் கருக்கலைப்புக்காக நாட்டுமருந்தை உட்கொண்டதாக குமாரி தனது கணவரிம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் மருந்து, மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதையடுத்து குமாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல தங்கள் வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர்.
மோசமான உடல்நிலை
ஆனாலும், ஒருசில நாள்களிலேயே குமாரியின் உடல்நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்த குமாரியின் கணவருக்கு, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் செல்போனில் தொடர்பு கொண்டு, குமாரி மயங்கி கிடப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.
இதனால் பதறிப்போன பிரதாப் உடனடியாக வீட்டிற்கு வந்து, தனது மனைவியை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அவருடைய கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, சீழ் பிடித்து மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும், அபாயகட்டத்தில் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு குமாரியின் கணவர் ஒப்புக்கொண்டதையடுத்து மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொண்டனர்.
பெண் உயிரிழப்பு
ஆனால் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்தால் அவரை காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து குமாரின் சகோதரி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரதாப் உள்காவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கர்ப்பிணியான குமாரி கருக்கலைப்புக்கான நாட்டுமருந்தை வாங்கி சாப்பிட்ட சில நாள்களிலேயே வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாகவும், இறந்த சிசு வெளியேறாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயிற்றிலேயே தங்கிவிட்டதால் கர்ப்பபையில் சீழ் வைத்ததே இறப்புக்குக் காரணமாக அமைந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
காவல் துறை அறிவுரை
மருத்துவரின் அறிவுரையின்றி அக்கம்பக்கத்தினரின் அறிவுரை கேட்டு முன்பின் தெரியாத நபர்களிடம் சென்று நாட்டு மருந்து என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டதாலேயே இந்த கொடூரம் நடந்திருப்பதாகவும், இதில் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட குடும்பநல இணை இயக்குநர் அமுதா, குமாரியின் கணவர் பிரதாப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: பானி பூரியில் சிறுநீர்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்