கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை விநியோகிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, அருள் அரசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் குடும்ப அட்டை இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் குடும்ப அட்டை இல்லாத குடிபெயர் தொழிலாளர்களின் ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை அரசு மற்றும் நீதிமன்ற பதிவாளரிடம் வழங்க மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை என்ற மனுதாரரின் கோரிக்கையை, அதேபோன்ற கோரிக்கை வழக்கில் வரும் 28 ஆம் தேதி இணைத்து விசாரிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு திட்டம்!