சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்(Anna centenary library) டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருதுகளை 33 நூலகங்களுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்.
மேலும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிய உங்கள் நூலகம் உள்ளங்கையில் என்ற TN Employment News மற்றும் www.tnemployment.in என்ற இணையதளத்தையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பொது நூலகத் துறையின் சார்பில் இளைஞர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அரசின் வேலை வாய்ப்புகளை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் உங்கள் நூலகம் உள்ளங்கையில் என்ற செல்போன் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடிகளுக்கு மின்னுருவாக்கம்
மேலும், தொன்மையான தமிழ் மற்றும் தமிழ் மொழியினை அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய அச்சு நூல்கள் இதழ்கள் ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களை பொது நூலக இயக்ககம் மின்னுருவாக்கம் செய்துள்ளது.
இதுவரை 19 ஆயிரத்து 684 நூல்களும் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 694 ஓலைச்சுவடிகள் பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் .
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
சுழற்சி முறை வகுப்பு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது. தற்போதை வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் சுழற்சி முறை வகுப்புகளை நிறுத்த முடியாது.
கரோனா தொற்று முழுமையாக குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்கு உதவி எண்
பள்ளி வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கான புத்தகங்களில் முதல் பக்கத்தில் ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு குழந்தைகளுக்கான உதவி எண்கள்(Child Helpline) அச்சிட்டு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் 1098 மற்றும் 14417 ஆகியவை குறித்த ஸ்டிக்கர்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும். தனியார் பள்ளிகள் கரோனா காலத்தில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டாம்.
தேர்வு தள்ளிப்போக வாய்ப்பில்லை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது, கடந்த ஆண்டுகளைப் போலவே வினாத்தாள் வடிவமைப்பு இருக்கும்.
பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டு போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுமெனவும், தள்ளிப்போக வாய்ப்பு இல்லை" என்றார்.
மேலும், உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்படும் நூலகங்களை பள்ளிக்கல்வித்துறை ஏற்பதில் நிதி சுமை இருக்குமெனவும், அதிகளவில் நூலகங்களை உருவாக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அனுமதியின்றி தாய்மார்களுக்கு 'காப்பர் டி' பொருத்தும் மருத்துவர்கள் - நடவடிக்கை எடுக்குமா அரசு?