இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல்&டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் சில ஏற்றுமதிக்காக மட்டும் அனுமதி பெற்று இயங்கி வந்த சிறு துறைமுகத்தை கடந்த 2018 இல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6,000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் முழுமையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல், கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த துறைமுக திட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கு எதிரானது எனவும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர். துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கும் கடற்கரையும் அரிக்கப்பட்டு, கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் என மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், கொற்றலை ஆறு ஆகியவை பாதிக்கப்படுவதோடு, சுற்றியிருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர். இத்திட்டத்திற்கு தேவையான 6,110 ஏக்கரில், 2,291 ஏக்கர் மக்களுக்கு சொந்தமான நிலமும், 1,515 ஏக்கர் தனியார் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் சுமார் 1,967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்ற உள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு 2,000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். இது கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காமராஜர் துறைமுகமும், சென்னை துறைமுகமும் அவற்றின் ஆற்றலில் 50 சதவீதம் கூட செயல்படாத நிலையில், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறை துறைமுகங்களையும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும். இது அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு. மேலும், அதானி லாப வேட்டை நடத்திட இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்துமே தவிர வேலைவாய்ப்பை தராது. இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசுகள் துணைபோகக் கூடாது. எனவே, இந்த துறைமுக விரிவாக்கத் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: சசிகலா விடுதலைக்கான மாயத்தோற்றம் அதிமுகவை அசைக்காது- ஜெயக்குமார்