2ஜி வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது திமுக மேல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார். அதிமுக பொற்கால ஆட்சி நடத்தி வருவது போல் பேசியுள்ளார். இதுவரை அதிமுக - திமுக குற்றம்சாட்டுவது, எதிர்குற்றம் சாட்டுவது இயற்கை தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழைய பொய்யான குற்றச்சாட்டுகளை புதுப்பித்து பேசியுள்ளார். இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது தகுதியை தாண்டி குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். இதற்கு பதில் சொல்லும் கடமை திமுகவிற்கு உள்ளது.
அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் காலம்தொட்டு முதல் சர்க்காரியா கமிஷன் முதல் 2ஜி வரை இன்று வரை திமுக மேல் சொல்லப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை, அதுமட்டுமல்ல திமுக தலைவர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்க முடியும். அதற்காக முதலமைச்சருடன் விவாதம் செய்ய நான் தயார். இன்று, நாளை என எப்போது அழைத்தாலும் நான் தயார்.
கோட்டையில் விவாதம் வைக்க தயாரா? எங்கு வேண்டுமானாலும் நான் வரத் தயார். அம்மா ஆட்சி என்று செல்கிறார்கள். ஆனால், ஊழல் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட அவரது புகைப்படத்தை பார்க்க தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். நான் விவசாயி என்று பாஜகவிற்கு ஆதரவாக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை நடிகர் ரஜினிகாந்திற்கும் உண்டு. திமுக வாக்கு வங்கியை யாரும் பிரிக்க முடியாது. தற்போது தமிழ்நாடு அரசு மீதான மக்களின் வெறுப்பை, ஆட்சிக்கு எதிரான மனநிலை யாராலும் மாறாது. ஆன்மீகம் என்றாலே மதம் என்பது மக்களின் பார்வை. மதசார்பற்ற ஆன்மிகம் என்பதை ரஜினிகாந்த் மக்களிடம் புரிய வைக்க 25 ஆண்டுகள் ஆகும்.
வலதுசாரிகள் ரஜினிகாந்த் வருகையை ஆதரிப்பதைப் பார்க்கும்போது, எப்படி அவர் மதசார்பற்ற அரசியல் கொண்டு வர முடியும். திமுக எதிர்நிலை ரஜினிகாந்த் எடுப்பாரா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதே அவர் பாஜக தரப்பு தான் என்று யூகிகத்தின் அடிப்படையில் கூற முடியாது. ரஜினிகாந்த் என்று இல்லை மதசார்பற்ற கூட்டணியில் யார் கொள்கை ரீதியாக எங்களுடன் ஒத்து வருகிறார்களோ அவர்களுடன் திமுக கூட்டணி அமைக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் 63 இடங்களில் புயல் நிவாரண முகாம்கள்