கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் நிதிநிலைமை குறித்தான 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆக.09) வெளியிட்டார். இந்த அறிக்கையில் மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள் ஆகியவை குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன.
வெள்ளை அறிக்கையில் என்னென்ன அடங்கும்?
அரசின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை அரசு முன்வைக்கவும், அதன் மீதான பொதுமக்களின் கருத்துகளை விவாதிக்கவும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. இது அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையாகும்.
முழு வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களையும், புள்ளி விவரங்களையும் வெள்ளை அறிக்கையானது கொண்டிருக்கும். இந்த அறிக்கையின் முதல் பக்கம் வெள்ளை நிறத்தில் உள்ளதால் இது வெள்ளை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.
இந்த அறிக்கை மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களிடையே உள்ள கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும். இதன் மூலம் தகவல்கள் பரிமாறப்படும், அதுதொடர்பான பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படும்.
இந்த வெள்ளை அறிக்கை மூலம் அரசு ஒரு சட்டத்தை வகுக்கும் முன்னர் அதன் கொள்கை தொடர்பான விருப்பங்களை முன்வைக்க முடியும். அரசு தரப்பில் இருக்கும் பிரச்சினைகளும் அதற்குண்டான தீர்வுகளும் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.
சர்ச்சைக்குரிய அரசின் கொள்கைப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் விவாதிக்க இந்த அறிக்கை உதவுகிறது.
இதையும் படிங்க: நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!