கோடைக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஜோராக நடைபெறும் தண்ணீர் கேன் விற்பனை மந்தமாகியுள்ளது. கரோனா தொற்றைத் தடுக்க, அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு தண்ணீர் கேன்கள் விற்பனை செய்பவர்களையும் விட்டு வைக்கவில்லை.
தண்ணீர் கேன்கள் பொதுவாக வீடுகளில் குடிப்பதற்கு மட்டுமின்றி உணவகங்கள், சிறு கடைகள், திருமணம் உள்ளிட்டவை நடைபெறும் மண்டபங்கள் எனப் பல இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், திருமணங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை. கடைகள் மற்றும் உணவகங்களும் சரியாக இயங்கவில்லை. மேலும், தங்கும் விடுதிகளும் செயல்படாததால் தண்ணீர் கேன் விற்பனை தொழில் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராததால் எப்போதும் போல் வியாபாரம் செய்ய இயலவில்லை என்று புலம்பும் தண்ணீர் கேன் விற்பனையாளர்கள், கடைகளில் வேலை செய்பவர்களின் வீட்டுச் செலவிற்குப் பணம் கூட கொடுக்க இயலவில்லை என்கின்றனர். ஊரடங்கினால் மிகப்பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் பதிவு பெற்ற அமைப்புகளுக்கு மட்டுமே உதவிகள் செய்து வருவதைப் போல், தங்களைப் போன்ற சிறு வணிகர்களுக்கும் உதவ முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை!