சென்னை: மாநகராட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜியோ பைபர் கேபிள் நிறுவனத்துடன் போட பட்ட ஒப்பந்தத்தில் முறைகேட்டுடன் காலாவதியான பிறகும் தொடர்வதாக, வார்டு உறுப்பினர் ஜீவன் மாமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்ற செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் பேசிய, 35 வார்டு உறுப்பினர் ஜீவன், ஆவேசத்துடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவையில் வைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜியோ பைபர் கேபிள் நிறுவனத்துடன் போட பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஒப்பந்தம் காலாவதியாகியும் அந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருக்கிறது. இதைப் பற்றி மாமன்றத்தில் பேசப்போவதாக விவரங்கள் சேகரித்தபோது, மூத்த மாமன்ற உறுப்பினர் இதைப் பற்றி மாமன்றத்தில் பேசினால் உங்களுக்குத்தான் தேவையில்லாமல் அழுத்தங்கள் மேல் இடத்திலிருந்து வரும் என தெரிவித்தார்.
அது மட்டும் இல்லாமல் சிறையில் இருந்து கூட உங்கள் அலைபேசிக்கு மிரட்டல் வரும் என தெரிவித்தார். இதையெல்லாம் மாநகராட்சி விஜிலென்ஸ் கண்டு கொள்வதில்லை மாநகராட்சி விஜிலென்ஸ் துறை தூங்கி கொண்டிருக்கிறதா? 6ஆம் தேதி சென்னை மாநகராட்சி மின்சார துறைக்கு கடிதம் கொடுத்தேன் இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஆட்சி மாறி இருக்கிறது; அதிகாரிகளின் காட்சி மாறவில்லை. சென்னை மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் மடை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, அதை சரிசெய்து சென்னை மாநகராட்சிக்கு வரக்கூடிய வருமானம் சரியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார்.
அதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 'மத்திய அரசின் புதிய விதியின் படி டவர் நடுவதற்கும் ஒரு முறை கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் கேபிள்களை தரைக்கி அடியில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மும்பை டெல்லி போன்றே பெரும்பாலும் தரைக்கு அடியில் மட்டுமே கேபிள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் போட பட்ட ஒப்பந்தம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு உறுப்பினருக்கு விரைவில் இது சம்மந்தமாக விளக்கம் அளிக்கப்படும்' என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தற்கொலை, விபத்துகளால் உயிரிழப்பு... தமிழ்நாட்டிற்கு 2ஆம் இடம்... அதிரவைக்கும் புள்ளிவிவரம்