சென்னை தி.நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "தொண்டர்கள் அனைவரும் கட்சி ஒன்றாக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். கோயம்புத்தூர் பேருந்தில் பயணசீட்டு எடுத்து பயணம் செய்த மூதாட்டி மீது வழக்கு தொடுத்திருப்பது மிகவும் தவறு.
மழைநீர் வடிகால்வாய் பணி ஆகஸ்ட் மாதத்திலேயே திமுக அரசு முடித்திருக்க வேண்டும். ஏனெனில், மழையானது முன்கூட்டியே பெய்ய தொடங்கிவிட்டது. ஓபிஎஸ் எப்போது என்னை சந்திப்பார் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. அதிமுகவில் பிரிந்த அனைவரும் ஒன்றுதான். அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.
ஆறுமுக சாமி விசாரணையை பொறுத்தவரையில் நேரில் வரலாம், வழக்கறிஞர் ஆஜராகலாம், அல்லது எழுத்துபூர்வமாக பதில் அளிக்கலாம் என்று என்னிடம் கூறப்பட்டது. நான் எழுத்துபூர்வமாக பதில் அளித்தேன். ஒவ்வொரு கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தங்களுடைய முயற்சியாக ஏதேனும் செய்வார்கள். அப்படி ராகுல் காந்தி நடைப்பயணம் சென்றுள்ளார்.
மத்திய அரசிடம் தேர்தல் நேரத்தில் சண்டையிட்டு கொள்ளலாம். ஆனால், மக்களுக்கு தேவையானதை மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுதான் பெற வேண்டும். மத்திய அரசிடம் கேட்பதற்கு அனைத்து உரிமையும் மாநில அரசுக்கு உள்ளது. மக்களின் நலன் கருதி அதை கேட்டு பெற வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணை கூடிய நேரம் விரைவில் வரும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி ஒன்றிணையும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை அமெரிக்கா பயணம்..! காரணம் என்ன..?