சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று (ஆக. 24) தொடங்கப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சென்னை மாநகராட்சியிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட மையங்களில் 24.08.2020 முதல் 28.08.2020 வரை (26.08.2020 புதன்கிழமை நீங்கலாக) நான்கு நாட்களுக்கு முதற்கட்டமாக வைட்டமின்-ஏ திரவ மருந்தை வாய்வழியாகக் கொடுக்கும் சிறப்பு மருத்துவ மருத்துவ முகாம்கள் காலை எட்டு மணி முதல் மாலை மூன்று மணி வரை நடத்தப்படவுள்ளது” என்று கூறினார்.
மேலும், “இரண்டாம் கட்டமாக, இந்த முகாம்கள் 31.08.2020 முதல் 04.09.2020 வரை (02.09.2020 புதன்கிழமை நீங்கலாக) நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டு வைட்டமின்- ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த முகாம்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு 29.08.2020, 05.09.2020 ஆகிய இரண்டு நாட்களுக்கு முகாம் நடத்தப்பட்டு வழங்கப்படும். இம்முகாமில் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள 5,72,674 குழந்தைகள் பயனடைவார்கள்.” என்றார்.
மரக்கன்றுகளால் புழல் ஏரிக்கரையை பசுமையாக்கும் சமூக ஆர்வலர்கள்!
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்-ஏ விளங்குகிறது. குழந்தைகளின் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்து, நான்கு மாதங்களில் குறைய ஆரம்பித்து ஆறு மாதங்களில் மிகவும் குறைந்து விடுகிறது. எனவே, வைட்டமின்-ஏ நுண்ணூட்டச் சத்தை ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை கொடுப்பது அவசியமான ஒன்றாகும்.