சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு தமிழ்நாடு அரசும் நீண்ட நாள்களாக அறிவுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகளை நடத்துவோரிடம் முகக்கவசம் அணிவதை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (ஜூலை 14) வலியுறுத்தி வந்தனர். அந்த பகுதியில் இருந்த சாந்தா என்னும் நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 13 பேர் முகக்கவசம் அணியாததால், அவர்களை முகக்கவசம் அணியுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மேலும், நகைக்கடையில் உடலின் வெப்பநிலையை அளவிடும் கருவியும் இல்லை, அதே போல வாடிக்கையாளர்களுக்கு சானிடைசரும் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்ததால், கரோனா விதிகளை கடைபிடிக்குமாறு கடை உரிமையாளர் சந்தோஷை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக மாநகராட்சி சுகாதாரத்துறை உதவி ஆய்வாளர் முரளி, இரண்டு பேருக்கு அபராதம் விதித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நகைக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார், அதிகாரி முரளியை தாக்கினார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் குமார் மீது புகார் அளித்தனர். மேலும் நகைக்கடையினை நடத்தும் உரிமையானது, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தும், அதை புதுப்பிக்காமல் கடையை நடத்திக்கொண்டிருப்பது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்தது. தற்போது, மாநகராட்சி அதிகாரியை, நகை கடை உரிமையாளர் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி பேசுபவர்கள் அனுமதி!