தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை, நல்ல வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்வு செய்யும் நோக்கத்துடன் ’நம் வேட்பாளர்களை அறிவோம்’ என்ற மென்பொருள் செயலியை அறப்போர் இயக்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறும்போது, ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்தும் இந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழலை பற்றி பேசக்கூடாது என்று 19 முறை முறையிட்டும், ஊழலைப்பற்றி பேச எந்தத் தடையும் விதிக்க முடியாது என அவரது கோரிக்கையை உயர் நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. அதிமுக ஆட்சியில் மின்துறையில் 30 ஆயிரம் கோடி இழப்பு என மத்திய தணிக்கை அமைப்பான சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு முந்தைய தேர்தலில் அவர் தெரிவித்தபடி, ரூ.1 கோடி கடனாக இருந்தது. ஆனால், இன்றைக்கோ 44 கோடியாக அவரது சொத்து உயர்ந்துள்ளது. அமைச்சர் கே.சி.வீரமணியின் சொத்து மதிப்பு தற்போது 34 கோடியாக உயர்ந்துள்ளது.
அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சித்தரஞ்சன் வீட்டை வாங்கியதன் பின்னணி என்ன? வீட்டின் மதிப்பு தற்போது ரூ.8.8 கோடி என்றுள்ளது. இந்த வீடு உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ளது. அவர் சினிமா தயாரிப்பாளராவதற்கு முன்பு இந்த வீட்டிற்கு எந்த அடிப்படையில் லோன் கொடுக்கப்பட்டது, அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லை. அதேபோல், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் சொத்து 2 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக,1969ல் துரைமுருகன் மகனுக்கு என்ன வயது இருக்கும்? அந்த சொத்தை அவர் எப்படி வாங்கியிருப்பார். மேலும், அவரது தங்கை தானம் கொடுத்ததாக ஒரு சொத்தை அவர் கணக்கு காட்டியுள்ளார்.
எனவே, கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி வேட்பாளர்களின் சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு அது குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளோம். அதனால், இதனை நன்கு அறிந்து நல்ல வேட்பாளர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ’நேர்மையாக இருந்ததால் அதிமுக ஆட்சியில் பந்தாடப்பட்டேன்’