இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-2021ன் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள், முதன்மை முகவர் மற்றும் எண்ணிகை இட முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கைக்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்.டி-பி.ஆர் (RT-PCR) பரிசோதனை செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பரிசோதனை செய்ய விருப்பமில்லாதவர்கள் அல்லது தவறியவர்கள் ஐ.சி.எம்.ஆர் (ICMR) ஆல் அங்கீகரிக்கப்பட்ட அரசு/தனியார் பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழினை பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதனை அரசியல் கட்சியின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தி கொண்டு வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்து நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவணை (2 dose) தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனுமதிக்கப்படுவர்.
மேற்படி இருசான்றில் ஏதேனும் ஒன்றினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனுமதிக்கப்படமாட்டார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை முடிவுற்றபின் சான்றிதழினை பெற்றுக்கொள்ள வெற்றி பெற்ற வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வெற்றி பேரணி அல்லது கொண்டாட்டங்களுக்கான அனுமதியினை தடை செய்துள்ளது. எனவே, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.