தென்மேற்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எழிலகத்தில் இன்று (ஆக.10) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “ தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் இதுவரை சராசரியாக 236 மி.மீ மழை பெய்துள்ளது.
இது பருவமழை கால சராசரியை விட 56 விழுக்காடு அதிகம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 18.11 மி.மீ மழை பெய்துள்ளது.
குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்துள்ளது. அங்கு கடும் மழையால் பாதிக்கப்பட்ட 1,345 பேர் 20 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பெய்த மழையில் 142 வீடுகள் பகுதியாகவும், நான்கு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 130 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மழை தொடர்ந்து வருவதால் பேரிடர் மீட்பு படையினர் சுமார் 214 பேர் அங்கேயே தங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’இந்த மழையில பிள்ளைங்களுக்கு ஒன்னும் ஆகக் கூடாது’ - வீடின்றி தவிக்கும் மலைவாழ் மக்களின் வேதனைக் குரல்