சென்னை: சொத்துக்குவிப்புப் புகாரில் சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்த ஐ.எப்.எஸ் அலுவலர், வெங்கடாசலம். இவர் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்கடாசலம் ஓய்வு பெற இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வெங்கடாசலத்தின் வீடு உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல்
சோதனையில் ரூ.13.5 லட்சம் ரொக்கம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வெங்கடாசலத்திடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால் வெங்கடாசலம் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேளச்சேரியில் உள்ள தலைமைச் செயலக காலனி வீட்டில் தங்கி வந்த, வெங்கடாசலம் இன்று மாலை திடீரென தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வேளச்சேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.