கோயம்பேடு சந்தை கரோனா கிளஸ்டராக மாறியதால், அங்கு செயல்பட்ட காய்கறிக் கடைகள் திருமழிசைக்கும், பழக்கடைகள் மாதவரத்துக்கும் தற்காலிகமாக மாற்றப்பட்டன. இருப்பினும், கோயம்பேடு சந்தையைப் போன்ற இட வசதியோ, சுகாதார வசதியோ திருமழிசை, மாதவரத்தில் இல்லாததால், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழையால் திருமழிசை தற்காலிக சந்தைப் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் லாரிகளிலிருந்து காய்கறிகள் இறக்க முடிவதில்லை என்றும், யாரும் நடக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வியாபாரிகள் கடந்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழச் சந்தையிலும் இதே நிலை நீடிக்கிறது.
மேலும், தற்போது செயல்படும் தற்காலிக சந்தைகளில் தேவையான வசதிகள் இல்லை என்பதால் சென்னை நகருக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுவதில்லை என்பதால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் பாதிப்புகள் அனைத்தும் இறுதியாக சென்னை மக்களின் மீது விலையேற்றம் என்ற பெயரில் இறக்கிவைக்கப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தொற்று சென்னையில் படிப்படியாக குறைந்து வருவதால் ஜூலை மாதத்திற்குப் பிறகு கோயம்பேடு சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அரசின் உத்தரவுப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்று சென்றாரா?