சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு ஆக., 17ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்தனர். வேதா நிலையத்தை நினைவு இல்லமாக்கும் முடிவில் உறுதியாக இருந்த ஆளும் அதிமுக அரசு, கடந்த ஆண்டு மே மாதம் அவசர சட்டம் ஒன்றை இயற்றியது. வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என அதிமுக பிரமுகர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஜெயலலிதாவின் பேரில், 36 கோடியே 96 லட்சம் ரூபாய் வரி பாக்கி உள்ளதாகவும், வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாரிசு உரிமை
தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்க வேண்டும் என, தீபக்கும், தீபாவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவின் வரி பாக்கியை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில், தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்து கடந்த மே 29ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
வேதா நிலையம் அரசுடமையாக்கம்
இதற்கிடையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற, நிலத்தை கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையாக, ரூ.67.90 கோடியை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியது. இதனால் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவித்தது. தொடர்ந்து வேதா நிலையத்தை நினைவில்லமாக்கும் முயற்சிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.
நிலையம் டூ நினைவு இல்லம்
'வேதா நிலையம்' 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் மூன்று மாடிகளுடன் அமைந்துள்ள வீடு. அங்கு 32 ஆயிரத்து 721 அசையும் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்களும், 394 நினைவுப் பரிசுகளும் அடங்கும்.
அத்துடன் 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருள்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.
சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான அரிய கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருள்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப் பொருள்களுடன், பொருள்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் இதில் உள்ளது.
திறக்க அனுமதி பார்க்க தடை
வேதா நிலையத்தை கையகப்படுத்தியதற்கு எதிர்த்தும், அந்த வீட்டிற்கு ரூ. 69 கோடி இழப்பீடு நிர்ணயம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக், தீபா தொடர்ந்த வழக்கு ஜன.27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி நினைவு இல்லம் திறப்பு விழாவிற்கு அனுமதி வழங்கியும், அதனை பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட தடை விதித்தும் இடைக்கால தீர்ப்பளித்தார்.
மேலும், வேதா நிலைய வளாகத்தின் நுழைவு வாயிலை திறந்து நிகழ்ச்சி நடத்தலாம், என்றாலும் வேதா நிலைய பிரதான கட்டடத்தை திறக்க கூடாது. ஜெயலலிதாவின் உடமைகள் முறையாக கணக்கெடுக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க கூடாது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் சாவியை தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசு மேல் முறையீடு
இந்த நிலையில், வேதா இல்லத்தின், பிரதான கட்டடத்தை திறக்க அனுமதிக்காதது உள்ளிட்ட இரண்டாம் பகுதி உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஜன.27 ஆம் தேதி இரவில் காணொலி வாயிலாக தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில், தமிழ்நாடு அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு வழக்குரைஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி, வழக்கை ஜன., 29ஆம் தேதி் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வேதா நினைவு இல்லத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஜன., 28ஆம் தேதி காலையில் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:வேதா இல்ல வழக்கு: தமிழ்நாடு அரசு மேல்முறையீடு