திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார்.
அவரது மறைவையொட்டி திமுக சார்பில் ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அக்கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு ரத்துசெய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேராசிரியர் க. அன்பழகனின் மறைவையொட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுகவிற்கு எந்த மாதிரியான சூழல் ஏற்பட்டபோதும், கருணாநிதிக்கு கண்ணுக்கு இமையாக, உடலுக்கு உயிராக, உடன் இருந்து, திமுகவை பாதுகாத்த மாவீரர் பேராசிரியர் அன்பழகன் என்று தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், "டாக்டர் நடேசனார், வெள்ளுடை வேந்தர் தியாகராயர், டி.ம். நாயர் அமைத்த திராவிட இயக்கத்தின் கரு அறையை, எஃகுக் கோட்டையாக ஆக்கிய அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில், எட்டுத்திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த கருணாநிதிக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திமுகவின் பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் பேராசிரியர் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.
பச்சையப்பன் கல்லூரிக்கு மட்டும் பேராசிரியர் அல்ல, திராவிட இயக்கப் பல்கலைக்கழகத்திற்கும் அவரே பேராசிரியர். சொற்பெழிவு ஆற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான். தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்று, உய்த்து உணர்ந்த பேராசிரியர் நிகழ்த்திய இலக்கிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும், மேடைகளில் வீசிய மெல்லிய பூந்தென்றல் ஆகும்.
1989ஆம் ஆண்டு, நான் வன்னிக் காடுகளுக்குச் சென்று, இந்தியப் படைத் தாக்குதலில் நூல் இழையில் தப்பித்துத் திரும்பியபோது, பேராசிரியர் வீட்டுக்குச் சென்றேன். என்னை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததை எந்நாளும் மறக்க முடியாது.
இன்றிலிருந்து மூன்று நாள்களுக்கு மதிமுகவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் வைகோ தெரிவித்திருந்தார். பேராசியர் 100 அகவையைக் கடந்து வாழ்வார் என்று நம்பியிருந்த நேரத்தில், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
பொதுவாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த இனமானப் பேராசிரியரின் பெயரும் புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை