இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மணப்பாறை நகராட்சி, மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியும் உள்ளது.
மணப்பாறை வட்டம், மருங்காபுரி வட்டம் என இரு வருவாய் வட்டங்கள் உள்ளன. இந்தப் பகுதி ஆற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட பகுதியாகும். வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பெரும்பாலும் மழை காலங்களில் மட்டுமே மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பும், பாரம்பரியம் மிக்க மணப்பாறை முறுக்குமே இவர்களுக்கான தொழில் வாய்ப்புகளாகும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயர் கல்வி படிக்க வழியின்றி திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கட்டட வேலைக்குச் செல்கின்றனர்.
முற்றிலும், பின்தங்கிய கிராம மக்கள் வாழும் இப்பகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் கடைக்கோடி கிராமத்திலிருந்து கிராமப்புற மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் 90 கி.மீ. தூரமுள்ள திருச்சிக்குத் தான் செல்ல வேண்டும்.
மிகவும் பொருளாதாரச் சுழலில் பாதிக்கப்பட்டுள்ள கிராமப் புற மாணவர்கள் திருச்சிக்குச் செல்ல முடியாத வறிய நிலை உள்ளது. ஆகவே, அவர்களின் கல்லூரிக் கனவு என்பது கானல் நீராகப் போகிறது.
மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மறுமலர்ச்சி திமுக தோழர்களால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மறுமலர்ச்சி திமுக தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் மூலம் தமிழக முதல்வருக்கு செப்டம்பர் 13- ம் நாள் மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வலியுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முகநூல், வாட்ச் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை அட்டையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கடந்த ஐந்து நாள்களாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் அமைதியான முறையில் போராடி வருகின்ற மணப்பாறை மக்களின் கோரிக்கைக்கு அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு மணப்பாறையில் உடனடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.