இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவி பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று, நம்பிக்கையுடன் நீட் தேர்வை எழுதி இருக்கிறார். தேர்வு முடிவுகளில் அவர் வெறும் 68 மதிப்பெண்கள் பெற்றதால், மனம் உடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார், அவருடைய பெற்றோர் செல்வராஜ் - ராஜலட்சுமி இருவரும் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிகின்றனர், சாதாரண எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்துபோனதால், உயிரைப் போக்கிக்கொண்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டையில் நம்பிராஜ் என்பவரது மகள் வைஷ்யா நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் பெற்றதைப் பார்த்துவிட்டு, உடலில் மண்ணென்ணெயை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக. நீட் தேர்வை வலிந்து திணித்ததால், பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் 2017 இல் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டு போனார். ஏழைத் தொழிலாளியின் மகளான பிரதீபா பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1200க்கு 1125 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி, திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 907 மதிப்பெண் பெற்றும், நீட்டில் மிகக் குறைந்த மதிப்பெண் வந்ததால், தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்தார்.
சென்னை, சேலையூரில் ஏஞ்சலின் சுருதி என்ற மாணவியும் கடந்த ஆண்டு நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமல் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டனர். நேற்று ரிதுஸ்ரீ, வைஷ்யா தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளி மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவிகள். மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சுமந்த இந்தக்
குழந்தைகள், நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள இலட்சக் கணக்கில் செலவு செய்து பயிற்சி மையங்களில் சேர முடியாதவர்கள்.
மத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகின்றன?
மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.
புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும்.
மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்க, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும்தான் ஒரே வழியாகும். அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும்.
நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத மாணவக் கண்மணிகளே, தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து, மனம் தளராது எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் வாழ்க்கையின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
உயிரிழந்த மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷ்யா குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.