சென்னை: கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின் மக்கள் தனிப்பட்ட வாகனம் வாங்க ஆர்வம் காட்டுவதாக வணிகர்கள் கூறுகின்றனர்
பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் வெளியே சென்று வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக வெளியே வராமல் தகுந்த இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து பயன்பாடு குறைந்துவருகிறது. அதிகளவிலான மக்கள் இருசக்கர வாகனத்திலும், கார்களிலும் தனிப்பட்ட முறையில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
இதன் காரணமாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சிவராமன் நம்முடன் பேசுகையில், ஊரடங்கு காலத்தில் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டத்துக்கு பின், தங்கள் தெருவில் மட்டும் 20 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை பழைய வாகனங்கள் என்றும் கூறினார்.
இதைப்போலவே சென்னையின் பல்வேறு பகுதியில் வசிக்கும் மக்களும் அண்மைக் காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருப்பதை உணர்கின்றனர். ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களை விட, தற்போது இரண்டு மடங்கு கார்கள் விற்பனை செய்யப்படுவதாக பழைய கார் விற்பனை முகவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய சென்னை பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், இரண்டு மாதங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர் "தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு சந்தை இல்லை. கரோனா பாதிப்புக்கு முன்பாக ஜனவரி- பிப்ரவரியில் மாதம்தோறும் சுமார் 20 கார்கள் விற்பனையானது என்றால், தற்போது மாதம் சுமார் 40 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு புதிய கார்கள் வாங்கும் போது, பழைய கார்களை விற்பனை செய்வர். தற்போது புதிய கார்கள் வாங்குவது குறைந்துள்ளதால், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது" என்று கூறுகிறார்.
பொருளாதார சூழல் காரணமாக புதிய கார் வாங்குவது சிரமம் என்பதால் பழைய கார்களை தேர்வு செய்வதாக வாடிக்கையாளர் விக்னேஷ் கருத்து தெரிவிக்கிறார்.