சென்னை: நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.13) அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
- திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் பணிகள்,
- சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்கள் சார்பாக கட்டப்படவுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடங்களின் பணிகள்,
- திருச்சி, குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டு வரும் மனநல காப்பகத்தினை மேம்படுத்தும் பணிகள்,
- பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சார்பாக புதிதாக கட்டப்படவுள்ள மனநல காப்பகப் பணிகள்,
- பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும், இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைத்தல்,
- திருச்சி, மலைக்கோட்டை, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் பணிகள்,
- செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை, அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் பணிகள்,
- கோயம்புத்தூர் மாவட்டம், அனுவாவி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் கம்பிவட ஊர்தி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கூட்டத்தில் தமிழரின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாசார மையங்கள் அமைத்திடும் வகையில் முதற்கட்டமாக சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கலாச்சார மையம் அமைப்பது குறித்தும், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் மின்தூக்கி அமைக்கும் பணி குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் கேஎஃப்சி பர்கரில் இருந்த கையுறையால் அதிர்ச்சி..