திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து கட்சிக்கு அதிகளவிலான இளைஞர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டிவருகிறார். குறிப்பாக, 30 லட்சம் இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காக செப்டம்பர் 14ஆம் தேதி முதல் முகாம்கள் நடந்து வருகின்றன. அந்தவகையில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், சுபஸ்ரீ விவகாரம் தொடர்பாக அவர் பேசியபோது, திமுகவின் எந்த விழாக்களிலும் பேனர்கள் வைக்கப்படுவதில்லை. அதேபோல் நான் பங்கேற்கும் விழாவில் பட்டாசும் வெடிக்க வேண்டாம் என பல்வேறு விஷயங்களை பேசினார். அவரது இந்த பேச்சு உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்தது.
அதேசமயம் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உதயநிதி, திமுகவின் நிறுவனரான பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றிருப்பது சீனியர் உடன்பிறப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1971ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் திறக்கப்பட்ட இந்த அண்ணா சிலைக்கு, கருணாநிதி, ஸ்டாலின் என குன்னூருக்கு யார் வந்தாலும் மறக்காமல் மாலை அணிவித்துதான் அடுத்த பணியை தொடங்குவார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலினோ அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என கட்சியின் சீனியர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, ஒரு இளைஞரணி செயலாளராக இருந்துகொண்டு கட்சிக்கு இளைஞர்களை சேர்க்க உதயநிதி முனைப்புக் காட்டுவது எல்லாம் சரிதான். ஆனால், கட்சியை நிறுவியவரின் சிலைக்கு மாலை அணிவிக்காமல் சென்றது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை. மேலும், இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி பெரியார், அண்ணா குறித்து ஒருவார்த்தைக்கூட பேசாததும் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது எனவும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, கட்சியை நிறுவியவர் குறித்து பேச மறந்த உதயநிதி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க மறந்த உதயநிதி எப்படி தற்போதுள்ள கட்சி சீனியர்களை மதிப்பார் என கேள்வி எழுப்பும் அவர்கள், எவரை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பேரறிஞர் அண்ணாவை மறக்கலாமா உதயநிதி எனவும் முணுமுணுக்கின்றனர்.