சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்ய மறுப்பதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டு கேட்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ், அதன் தோழமை கட்சிகள் தொடர்ந்து 10 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
அதன்படி முதல் நாளான இன்று (செப். 20) திமுக சார்பாக அதன் இளைஞர் அணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தேனாம்பேட்டை அன்பகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எதிர்ப்பு வாசகங்கள்
ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் பயன்படுத்தப்பட்டது.
படிப்படியாக நிறைவேற்றுவோம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "சமையல் எரிவாயுவின் விலை மாதம் ஒருமுறை 25 ரூபாய் உயர்ந்து வருகிறது. திமுக அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி பெட்ரோல் விலையை குறைத்துள்ளோம். ஆனால், ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை கட்டுபடுத்தவில்லை. பொதுத்துறை நிறுவனங்களை பாஜக தனியாருக்கு விற்பனை செய்கிறது.
இதுபோன்ற பல்வேறு விவகாரங்களை திமுக எதிர்க்கிறது. இதனை எதிர்த்தே முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து பாசிச ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் சமையல் எரிவாயுக்கு மானியம் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.