சென்னை: தமிழ்நாட்டிற்குச் சொந்தமான பழமை வாய்ந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் கோவிந்தராஜனின் வீட்டில் பழமை வாய்ந்த அம்மன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வெண்கல சிலை கண்டெடுப்பு
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், அலுவலரின் வீட்டில் சோதனை செய்தனர். சோதனையில், அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள வெண்கல லட்சுமி அம்மன் சிலை இருப்பது தெரியவந்தது. இது குறித்து கோவிந்தராஜனிடம் விசாரணை நடத்தியதில், இந்த சிலையை தனது சகோதரி கொடுத்ததாக தெரிவித்தார்.
தனது சகோதரியின் மாமனார் இந்த சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்து வந்ததாகவும், 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதால் 1990ஆம் ஆண்டு அந்த சிலையை தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
சிலை குறித்து விசாரணை
இதையடுத்து, இந்த சிலைக்கு உண்டான எந்த ஒரு ஆவணங்களும் இல்லாததால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், கோவிந்தராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அம்மன் சிலையை மீட்டனர்.
கைப்பற்றப்பட்ட சிலை கோயில்களில் இருந்து திருடப்பட்டதா என்பது குறித்தும், சிலையின் தொன்மை தன்மை குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காணாமல்போன சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!