சென்னை: கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் தற்கொலை செய்ய முயன்றதைத் தொடர்ந்து, அதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, செங்கேணி அம்மன் கோயில் தெரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர், ராம்குமார்(35). இவரது தாயார் மீனாட்சி(60), சகோதரி சந்தனமாரி(40) மற்றும் அவரது மகள் சண்முகப்பிரியா(20). அனைவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் சின்ன நீலாங்கரை பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராம்குமார் வீட்டில் இன்று (செப்.19) கூச்சல் சத்தம் கேட்டதால் வீட்டின் உரிமையாளர் ஓடிவந்து பார்த்தபோது, நான்கு பேர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்துள்ளனர்.
பின் தகவலறிந்து வந்த நீலாங்கரை போலீசார், 108 ஆம்புலன்ஸை வரவழைத்த மருத்துவர் அளித்த பரிசோதனையில் சந்தனமாரி, சண்முகப்பிரியா ஆகியோர் உயிரிழந்துவிட்டதாகவும்; ராம்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோருக்கு பல்ஸ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாக ராம்குமார், தாயார் மீனாட்சி ஆகியோரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இருவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேறொரு நபருடன் தொடர்புபடுத்தி சித்தரித்து பேசியதாக இளம்பெண் தற்கொலை