இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 979 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 86 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல தமிழ்நாட்டிலும் இதுவரை 42 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இருவர், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "அமெரிக்காவிலிருந்து திரும்பிய இருவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் இன்று வீடு திரும்பினர். அவர்களுக்கு இருமுறை நடத்தப்பட்ட சோதனையில், அவர்களுக்கு வைரஸ் தொற்று குணமடைந்தது தெரியவந்தது. இருப்பினும், அடுத்த 14 நாள்கள் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானிக்கு கரோனா தொற்று