சென்னை: ஆவடியைச் சேர்ந்தவர் ஒட்டுநர் செல்வம்(36). இவரது மனைவி சுமலதா(29). இவர்களுக்கு ஆதிரன்(4), கவுசிக்(2), மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது.
இவர்களது உறவினர்கள் நேற்று சபரி மலைக்குச் செல்வதால் மகாலிங்க புரத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தினருடன் அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டிற்கு திரும்பினார்கள்.
இதில் அனைவரும் காரில் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் சங்கர் மட்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் செல்வதாகக் கூறியதையடுத்து அவரது இரு பிள்ளைகளும், தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதாகக் கூறியதால் இரண்டு மகன்களையும் செல்வம் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
மதுரவாயல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த மூன்று சக்கர சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மோதியதால், சாலையில் மூவரும் சாய்ந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியின் சக்கரத்திற்குள் மாட்டி ஆதிரன், கவுசிக் ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
செய்வதறியாமல் கதறிய தந்தை
செல்வத்திற்குப் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தன் கண் முன்னே இரண்டு மகன்கள் இறந்ததைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டது.
சிசிடிவி கேமராக்கள்; போக்குவரத்துக் காவல்
சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் முறையானப் பராமரிப்பு இல்லாதால் விபத்து குறித்த காட்சிகள் கேமராவில் பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு