சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியின் எண் ஒன்று கேட் வழியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவா் உள்ளே நுழைந்து, அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தார். இதை விமான நிலைய பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவில் பாா்த்த பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அலுவலர்கள், உடனடியாக விரைந்து சென்று அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனா்.
அவர் பல்லாவரத்தைச் சோ்ந்த முரளிராஜ் (28), தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளா் என்ற அடையாள அட்டை வைத்திருந்தாா். அவரை பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பிவிட்டனா். ஆனாலும் அவா் வெளியே வந்து விமான நிலைய வெளிபகுதியில் சுற்றிக்கொண்டிருந்தாா்.
இதற்கிடையே, விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவரை பாதுகாப்புப் படையினா் பிடித்து விசாரணையின்றி வெளியே அனுப்பிவிட்டனா். அவா் எப்படி உள்ளே நுழைந்தாா், அவரை பற்றிய முழு விவரங்கள் எதுவும் விசாரிக்கவில்லை என்ற தகவல் உயா் அலுவலர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து வெளியே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞரை இரவு 7.30 மணியளவில் மீண்டும் பாதுகாப்பு அலுவலர்கள் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் டெல்லி செல்ல வந்ததாக கூறினாா். ஆனால், அவரிடம் விமான டிக்கெட் எதுவும் இல்லை. மேலும், விசாரணையில் நண்பரை வழியனுப்ப வந்ததாக கூறினாா். இதையடுத்து இளைஞரை பாதுகாப்புப் படையினா் சென்னை விமான நிலைய காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
காவல் துறையினர் இளைஞரை விசாரித்தபோது, அவருடைய அடையாள அட்டை உண்மையானதுதான் என்று தெரியவந்தது. தான் ஒன்றாம் எண் கேட்டிலிருந்த பாதுகாப்புப் படை அலுவலரிடம் கூறிவிட்டுதான் உள்ளே சென்றதாகவும் அந்த இளைஞர் கூறினாா். அவர் மீது குற்ற பின்னணி எதுவும் இல்லை என்று தெரியவந்ததால், விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்று எழுதிவாங்கிக்கொண்டு விடுவித்தனா்.
சுதந்திர தினத்தன்று சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அப்படி இருக்கையில் இவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்று தெரிந்துகொள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில், முரளிராஜ் கேட்டில் காவல் பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏஎஸ்ஐக்கு தெரிந்தே உள்ளே நுழைந்து சுற்றியது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் எஸ்ஐ ஒருவா் வந்து முரளிராஜை பிடித்து விசாரித்துவிட்டு, உயா் அலுவலர்களுக்கு தகவல் கொடுக்காமல் அவரே விடுவித்தது பதிவாகியிருந்தது.
இதனால் காவல் பணியில் அலட்சியம், பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளே நுழைந்தவரிடம் முழுமையான விசாரணையின்றி விடுவித்தற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்கள் இரண்டு பேரும் நேற்று (ஆகஸ்ட் 16) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.