சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு கொரியர் மூலம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் கொரியர் நிறுவன அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பார்சலை பிரித்து சோதனை செய்தனர். அப்போது அந்த பார்சலில், டீ ஊற்றி வைக்க பயன்படும் டீ ட்ரம், வெண்கலத்தாலான டம்ளர், தட்டுக்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
போதைப் பொருள் கடத்தல்
அதனை சோதனையிட்டபோது டீ ட்ரம்மின் பின்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை சோதனைக்கு உட்படுத்தியபோது அது ‘சூடோ எபிட்ரைன்’ என்கிற தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த 5 கிலோ போதைப் பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருளை கொரியர் மூலம் கடத்த முயன்ற ஃபைசல், பாஷா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் வெண்கல அம்மன் சிலை மீட்பு