சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மப்பேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 100 மில்லி கஞ்சா ஆயில் மற்றும் ஐந்து கிராம் எடையுள்ள மெத்தோகட்டமின் என்ற போதை பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், கைதானவர்கள் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முகமது யூசுப்(35) மற்றும் சேலையூர் பகுதியை சேர்ந்த இலியாஸ் கான்(33) என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் அவர்களிடமிருந்த கஞ்சா ஆயில், மெத்தோகட்டமின் போதை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் தாம்பரத்தில் இரண்டு ஆண்டுகளாக கஞ்சா ஆயில் விற்பனை செய்து வந்ததாகவும், அதில் முகமது யூசுப் மீது கோவா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவில் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திருமணம் செய்ய மறுத்த காதலனை வெட்டி சூட்கேஸில் எடுத்துச்சென்ற காதலி!