சென்னை: பல்லாவரம் அடுத்த பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த செந்தில் குமார் உடைய மகன் விக்னேஷ் குமார்(16) தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
விக்னேஷ் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே இன்று (செப்.27) பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடியதைக் கண்ட அவரது தந்தை செந்தில் குமார் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விக்னேஷ், தான் குளிக்க போவதாகக் கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த செந்தில் குமார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து விக்னேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லாவரம் போலீசார் விக்னேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதி நிகழ்விற்கு எதிர்ப்பு கிளம்பியது ஏன்?