சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் நேற்று குடியரசுத் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது, அலுவலர்கள் எழுந்து நிற்கவில்லை என்றும், காரணம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்றும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து வீடியோ ஒன்றும் வெளியாகிஉள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அலுவலர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அலுவலர்களே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக ஆர்பிஐ அலுவலர்கள் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை; ஆர்பிஐ அலுவலர்கள் மீது புகார்