டிடிவி தினகரனோடு இணைந்து செயல்பட்டு வந்த தங்க தமிழ்ச்செல்வன் அவரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமமுகவில் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஊடகங்களிடம் பேசினால் ஒழுங்காக பேச வேண்டும். இல்லையென்றால் கொள்கை பரப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்குவேன் என கடந்த 20ஆம் தேதியே தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்தேன். யாரை நீக்குவதற்கும் எந்த அச்சமும் இல்லை. நீங்கள் பேசுவது சரியாக இல்லை என அனைவரும் சொல்கிறார்கள். எனவே உங்களுக்கு வேறு திட்டம் இருந்தால் அதை நிறைவேற்றுங்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார் என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கிடுவார். அவர் எனது உதவியாளரிடம் பேசவில்லை. செல்லப்பாண்டியன் என்ற கட்சி நிர்வாகியிடம்தான் அவர் பேசியிருக்கிறார்.
அவர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் என ஐடி விங் உட்பட பலர் கூறினர். நிர்வாகிகள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என நான்தான் தெரிவித்தேன். தேனியில் கூட்டம் போட்டு தங்க தமிழ்ச்செல்வன் நிர்வாகிகளிடம் தாறுமாறாக பேசியிருக்கிறார். முதல் முதலாக கட்சியிலிருந்து வரும் அறிவிப்பு நீக்கல் அறிவிப்பாக இருக்க வேண்டாம் என்று நினைத்துதான் நீக்க அறிவிப்பை வெளியிடவில்லை. அவருக்கிருக்கும் பதவியை வேறு யாருக்காவது கொடுத்தால் அவர் நீக்கப்பட்டதாகத்தானே அர்த்தம். அமமுகவிற்கு புதிய கொள்கை பரப்பு செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார்” என்றார்.