வைகுண்ட ஏகாதசி
ஆண்டுக்கு ஒருமுறை டிசம்பரில் நிகழும் ஆன்மிக நிகழ்வு வைகுண்ட ஏகாதசி. ஆனால் இந்த ஆண்டு (2019) வைகுண்ட ஏகாதசி டிசம்பருக்கு பதிலாக ஜனவரி மாதம் (2020) வருகிறது. அந்த வகையில் ஜனவரி 6ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் டிசம்பர் 26ஆம் தேதியும் வைகுண்ட ஏகாதசி வருகிறது. அதாவது இவ்விழா அடுத்தாண்டு இரண்டு முறை நடக்கிறது.
வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்த விழா 10 நாட்கள் நடக்கும். இதேபோல் திருப்பதியில் வைகுண்ட துவாரம் (சொர்க்க வாசல் திறப்பு) என்பார்கள். இவ்விழா இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும். இந்த விழாவை 2 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தரிசனம் நீட்டிப்பு
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் கூறும்போது, “வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்விற்கு திருச்சி ஸ்ரீரங்கம் ஒரு முன்னுதாரணம். அங்கு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும். இதேபோல் திருமலையிலும் திறக்க முயற்சித்து வருகிறோம். இதுதொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு வருகிறோம்” என்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு ஆன்மிக அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆன்மிக ஆச்சாரங்கள் மற்றும் இறை நம்பிக்கைகள் இருக்கும். அதனை மாற்ற முனையக் கூடாது” என்பதே அறிஞர்களின் கருத்து.
எனினும் இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர். டிசம்பர் மாதத்துக்குள் இதுபற்றி முடிவெடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏழுமலையானை தரிசித்த ரஞ்சன் கோகாய்!