சென்னையின் முக்கிய சந்திப்பான அண்ணா சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு ஆலோசனை நடத்திய போக்குவரத்து காவல்துறையினர், அண்ணா சாலையோடு இணையும் பிற சாலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள, குளறுபடியான போக்குவரத்து முறைகள் தான் நெரிசலுக்கு காரணம் என்பதை அறிந்தனர்.
முக்கியமாக, ஜி.பி சாலை நீண்ட காலமாக ஒரு வழிப்பாதையாக செயல்படுகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் ஜி.பி சாலையை பயன்படுத்தி, அண்ணா சாலையை வந்தடைந்தன. அண்ணா சாலையில் இருந்து ராயப்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் எதிரில் செல்லும் குறுகலான பட்டுள்ளாஸ் சாலையை பயன்படுத்தி நீண்ட தூரம் சுற்ற வேண்டியிருந்தது. அதே போல, ஜெமினி மேம்பாலத்தில் இருந்து ஸ்பென்சர் நோக்கி வரும் வாகனங்களும் வலது புறம் திரும்பி ராயப்பேட்டை செல்ல, ஒயிட்ஸ் சாலையை மட்டும் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, இதற்கு தீர்வு காணும் வகையிலும், அண்ணா சாலை நெரிசலை தவிர்க்கும் நோக்கிலும், ஜி.பி சாலையை இரு வழிச்சாலையாக சோதனை முறையில் மாற்றியுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு ஜி.பி சாலையில் உள்ள வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ள போக்குவரத்து காவல்துறையினர், நடைபாதை மற்றும் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜி.பி சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவலர்கள், இந்த சோதனை முறை பலன் அளித்தால், இந்த நடைமுறையே நிரந்தரமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அண்ணா சாலை - ஜி.பி சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அதே போல, அண்ணா சாலையில் இருந்து ஒயிட்ஸ் சாலையில் வாகனங்கள் வலது புறம் திரும்பத் தடை விதிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக பீட்டர்ஸ் சாலை சந்திப்பு, ஜி.பி சாலை சந்திப்புகளில் வலது புறம் திரும்ப அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 70 பள்ளிகள் நாளை திறப்பு!