சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி சென்னை கோயம்பேடு சந்தையில் ஆய்வுசெய்து, வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் வியாபாரிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது வியாபாரிகள், ”காய்கறி அங்காடி வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அப்படியே உணவு தானிய வணிக வளாகத்திற்கும் வந்து கொள்முதல் செய்ய ஏதுவாக காலை மூன்று மணி முதல் உணவு தானிய வளாகம் இயங்க அனுமதிக்க வேண்டும்.
குறிப்பிட்ட பொருளை குறிப்பிடப்பட்டிருக்கும் வளாகத்திற்குள்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டத்திற்கு கட்டுப்படாமல், காய்கறி, கனி அங்காடி வளாகங்களுக்குள் சட்டவிரோதமாக இயங்கும் உணவு தானிய வியாபாரத்தினை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத உணவு தானியக் கிடங்கினை தமிழ்நாடு அரசு உடனடியாக உபயோகத்திற்கு கொண்டுவர வேண்டும், உணவு தானிய வணிக வளாகத்திற்குள் இருக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வணிகர்கள், வளாகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
வளாகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அங்காடிகளுக்கு கழிவறை வசதி அமைத்துத் தர வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வியாபாரிகள் அமைச்சர் முத்துசாமியிடம் வலியுறுத்தினர். இதனை கோரிக்கை மனுவாகவும் அமைச்சரிடம் அளித்தனர்.
இதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் உறுதியளித்தார்.