சென்னை: கோயம்பேடு வணிக வளாகத்தில் நாளொன்றுக்கு வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதையடுத்து கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோர் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆணையர் ஆய்வு
அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கோயம்பேடு வணிக வளாகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை 4,742 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், ஜுன் மாதம் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இம்மாதம் மட்டும் 6,704 பேர்
அந்த வகையில், ஜுன் மாதம் 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 6,704 நபர்களுக்கு என, கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 11,446 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்றும், கோயம்பேடு வணிக வளாகம் மட்டுமல்லாமல், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை