சென்னை: வியாசர்பாடி ரயில்வே யார்டில் சரக்கு ரயில் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 13) அதிகாலை சரக்கு ரயில் ஒன்று வியாசர்பாடி ரயில்வே யார்டில் சரக்கு ஏற்றிவிட்டு புறப்பட்டு சென்றபோது தண்டையார்பேட்டை நேரு நகர் அருகே ரயிலின் நான்காவது பெட்டி தடம் புரண்டது. இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
5 மணிநேர போராட்டம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அலுவலர்கள், நீண்ட நேரமாக தடம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகளை மேற்கொண்டனர். அதிகாலை 4 மணியளவில் தடம் புரண்ட ரயில் பெட்டியை சுமார் 9 மணியளவில் சரிசெய்தனர். அதன்பின்னர் ஏற்றிய சரக்குகளுடன் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
மேலும், அதிகாலை நேரம் என்பதாலும், ரயில் ஓட்டுநர் உடனடியாக தடம் புரண்டதை அறிந்து ரயிலை நிறுத்தியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: 'உலக ரத்த தான தினம்' - ரத்த தானம்.. உயிர் தானம்..