மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பலர், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கும், காய்கறி கடைகளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. ஆன்லைன் வகுப்புகளை இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் நடத்தும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்கள், 70 முதல் 90 விழுக்காடு வரை கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வருகின்றன.
இந்நிலையில் மூன்றில் ஒரு பங்கு ஊதியம்கூட பல தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற செய்தி கவலையளிக்கிறது.
எனவே, இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சகம் கவனமெடுத்து, தனியார் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஊதியத்தை உரிய விழுக்காட்டில் உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.