சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காவல், சிறை, சீர்திருத்தப் பணிகள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைகளிலுள்ள 11,741 + 72 (பின்னடைவு காலிப்பணியிடங்கள் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுத்தேர்வு அறிவிப்பு 2020 செப்டம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் ஐந்து லட்சத்து 50 ஆயிரத்து 314 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். கடந்த டிசம்பர் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 37 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது.
நிறைவடைந்த தேர்வுகள்
எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் 2021 பிப்ரவரி 19 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களில் 1.5 விழுக்காட்டில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 113 விண்ணப்பதாரர்களுக்கும் இந்தத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
11,812 பேருக்கு தற்காலிக நியமனம்
இறுதியாக மூன்றாயிரத்து 845 விண்ணப்பதாரர்கள் மாவட்ட, மாநகர ஆயுதப்படைக்கும், ஆறாயிரத்து 545 விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கும், 129 விண்ணப்பதாரர்கள் சிறை, சீர்திருத்தப் பணிகள் துறைக்கும், ஆயிரத்து 293 விண்ணப்பதாரர்கள் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கும் தற்காலிகமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மொத்தமாக 11 ஆயிரத்து 812 விண்ணப்பதாரர்கள் (3,065 பெண் விண்ணப்பதாரர்கள், 3 மூன்றாம் பாலினத்தவர்) இந்தப் பொதுத்தேர்வு 2020இல் தேர்வுசெய்யப்பட்டனர்.
தற்காலிகமாகத் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் www.tnusrbonline.org நேற்று (நவம்பர் 26) வெளியிடப்பட்டது.
தற்காலிகமாகத் தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப் பணியாணை வழங்குவதற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை, முந்தைய பழக்கவழக்கங்கள் தொடர்பான காவல் துறை விசாரணை, அந்தந்தத் துறை மூலம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 கோடி செலவில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் மேலாண்மைப் பயிற்சி