சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணபங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களது விபரங்களை இணையவழியில் சமர்பிக்கும் போது, அறியாமல் சில தகவல்களை தவறாகப் பதிவு செய்து விடுகின்றனர்.
இதனால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணபங்கள் நிராகரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கென தங்கள் விண்ணப்பத்தில் சமர்பித்த விபரங்களை , விண்ணப்பம் சமர்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் வரையில் மாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ளது.
கடைசி நாளில் விண்ணப்பங்களைச் சமர்பிக்கும் போது பல விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் மாற்றங்கள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என கூறியுள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தேர்வாணையம் , தவறாக பதிவு செய்து சமர்பித்த விபரங்களை மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.
தேர்வாணையத்தால் இனி வரும் காலங்களில் வெளியிடப்படும் அறிவிக்கையில், ஆன்லைன் விண்ணப்பங்களில் சமர்பித்த விபரங்களை கடைசித் தேதி வரையில் மாற்றிக் கொள்ள விண்ணப்பதார்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி நாள் முடிந்தப்பின்னரும் 4 நாட்கள் கழித்து , விண்ணப்பத் தகவல்களை சரிபார்த்து மாற்றிக் கொள்ள 3 நாட்கள் வழங்கப்படும். இந்த 3 நாட்களில் விண்ணப்பதாரர்கள் தகவல்களை தவறாக பதிவு செய்திருந்தால் , அதனை மாற்றி சரியான தகவல்களை சமர்பிக்கலாம்.
விண்ணப்பத்தில் பதிவு செய்யும் போது, திருத்தம் செய்யும் போது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, அதனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கு விண்ணப்பதரரே பொறுப்பாவர். விண்ணப்பங்களை இறுதி செய்தப் பின்னர் அதில் மாற்றம் செய்ய முடியாது. அதன் பின்னர மாற்றம் செய்ய அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள், கடிதம், மின்னஞ்சல் போன்றவற்றின் மீது தேர்வாணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு; வரும் 22ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்!