2015ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த முறைகேட்டை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக அமைப்புச் செயாலாளர் ஆர்.எஸ். பாரதி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
மேலும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 63 பேர் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் எனவும், இந்த முறைகேட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டாளருக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முறைகேட்டை அம்பலப்படுத்திய தனியார் தொலைக்காட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள், இந்த முறைகேட்டை விசாரித்து வந்த 3 விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பதாகவும், முறைகேட்டில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த முறைகேட்டால் வருங்கால தமிழ்நாடே ஊழல் மிகுந்ததாக மாறும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை பிப். 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - 'மேஜிக்' பேனா தயாரித்துக் கொடுத்தவர் அதிரடி கைது