சென்னை: புதிய விதிமுறைகளுடன் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 4 பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்கு 2020 ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும்,11 திருநங்கைகளும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வானது, 32 மாவட்ட தலைநகரங்களில் 856 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் புதிய நடைமுறை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய நடைமுறை மற்றும் பாடத்திட்டத்தின்படி முதல் முறையாக தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.