சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குரலா ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ ஆகியப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை பெறப்படுகிறது.
திருத்தம் செய்ய வாய்ப்பு
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் தாங்கள் இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்து விட்டதாகவும் அவற்றை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டியும் தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற்றியைத் தவறவிடும் தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மார்ச் 14ஆம் தேதி முதல் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான வரும் மார்ச் 23ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணம்
விண்ணப்பதாரர்களே தங்களின் ஒருமுறை பயன்படுத்தும் குறியீட்டின் (One Time ID) மூலம் மார்ச் 23ஆம் தேதி வரை www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் திருத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பொழுது, தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதனையும் தேர்வர்கள் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, தேர்வுக் கட்டணங்கள் செலுத்தியவர்கள் மீண்டும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை' எனவும் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காசிரங்கா தேசிய பூங்காவின் காட்சிகள்