ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு போக்குவரத்து கழககத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிற்சங்கங்க ஊழியர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், மினி வேன்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தங்களை அழைத்துப் பேச வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 25ஆம் தேதி இரவு போக்குவரத்துத் துறை அமைச்சர், துறை செயலாளர், சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆகியோர் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சுமூக தீர்வு காணப்படாத நிலையில், போராட்டம் முடிவுக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், இன்று (பிப். 27) போக்குவரத்து தொழிற் சங்கத்தினருடன் மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே மக்களின் இன்னலை மனதில் கொண்டு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் சங்கங்கங்கள் தொமுச, சிஐடியு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சங்கங்கள் என்பதாலும், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய அறிவிப்புகள் வெளியிட முடியாததாலும் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு