சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அறிவுரைக் குழு ஏற்படுத்த வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் குழு அமைத்து அந்தக் குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் இரண்டு பேர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இரண்டு பேர், பள்ளி நிர்வாகத்தின் பிரதிநிதி ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஒருவர், மேலும் ஒரு பிரதிநிதி நியமனம் செய்ய வேண்டும்.
பள்ளியின் முதல்வர் நிரந்தர உறுப்பினராகவும் மற்ற 50 விழுக்காடு உறுப்பினர்கள் சுழற்சி முறையிலும் நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுக்கு மேல் ஒரு உறுப்பினர் அந்தப் பணியில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது. நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் குறித்த விவரங்களைக் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்க வேண்டும். பாலியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திலிருந்து இதற்குரிய நிதியினை ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.
மாணவர் மனசு என்ற பெயரில் புகார் பெட்டி அமைக்க வேண்டும். மேலும் அந்தப் புகார் பெட்டியில் மாணவர்களுக்கான கல்வி ஆலோசனைகள் வழங்கக்கூடிய உதவி மைய எண் 14 ஆயிரத்து 417 பதிவுசெய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் விலக்கு சட்டத்தின் நிலை குறித்து மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்